Tuesday, December 28, 2010

அல்லாஹ்விற்குரிய திக்ர்! மனிதனுக்குரிய பிரார்த்தனை!

ஸஅத் பின் அபீ வக்காஷ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமப்புற மனிதர் வந்தார். 'எனக்குச் சில வாக்கியங்களைக் கற்றுத் தாருங்கள், நான் அவற்றைச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்' எனக் கேட்டார்.

அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: நீர் இவ்வாறு கூறும்:

லாஇலாஹ இல்லல்லாஹு வஹதஹூ லாஷரீகலஹூ, அல்லாஹ் அக்பர் கபீரா, வல்ஹம்துலில்லாஹி கஸீரா, ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஜீஜில் ஹகீம்.

பொருள்:
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அல்லாஹ் அனைவரினும் பெரியவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலிக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வைத் தூயவன் என அதிகம் துதிக்கிறேன். யாவரையும் மிகைத்த நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்வின் உதவியும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் இல்லை. (தீமைகளை விட்டு விலக) எந்த சக்தியும் இல்லை.

அந்த கிராமப்புற மனிதர் கேட்டார். இது எனது இரட்சகனுக்குரியது. எனக்காக என்ன உள்ளது? அதற்கு நபியவர்கள் நீர் கூறும்:

அல்லாஹும்ம ஃபி(F)ர்ளீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஜுக்னீ.

பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு வழிகாட்டுவாயாக! மேலும் எனக்கு உணவு வழங்குவாயாக!.'

ஆதார நூல்கள்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072. அபூதாவூதில் சில விளக்கங்கள் கூடுதலாக உள்ளது. அந்த மனிதர் திரும்பி சென்றதும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'இரண்டு கைகள் நிரம்ப நன்மையை அள்ளிக் கொண்டார்'. பாகம் 1 பக்கம் 220.

No comments: